ஆசிரியர்கள் நியமன வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரைக் கிளையிலும் 2 வேறுபட்ட நிலை இருப்பதால், இதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக வழக்கை நாளை ஒத்திவைத்து மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பர்வதம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இதுதொடர்பாக மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் கணிதத் துறையில் பட்டமும், கல்வியியல் துறையில் பட்டமும்
பெற்றுள்ளேன். 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி
பெற்றேன். தேர்வு முறை தொடர்பாக பல்வேறு வழக்குகள் தாக்கலான நிலையில், தமிழக அரசு கடந்த 2018 ஜூலை 20-ஆம் தேதி போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு நடைபெறும் என அது தொடர்பான அரசாணை ஒன்றை வெளியிட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வெயிட்டேஜ் முறையால் 0.25
மதிப்பெண்களில் எனக்கான பணிவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தன் அடிப்படையில், தற்காலிக ஆசிரியர் தேர்வுக்கு பல வழிகாட்டுதல்களை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
ஆனால், அதில் இட ஒதுக்கீடு, முன்னுரிமை தொடர்பாக முறையான வழிகாட்டுதல்கள்
எதுவும் இல்லை. இதனால் கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று
சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்ற பலர் பணி அமர்த்தப்படவில்லை. அதுபோன்று
முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஆகவே இட ஒதுக்கீடு, முன்னுரிமை போன்றவை குறித்து முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்தும், அதன் அடிப்படையில் நடவடிக்கைகளைத் தொடர இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், “சென்னை உயர் நீதிமன்றத்திலும் இதே போன்ற வழக்குத் தொடரப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, “நான் வழங்கிய தீர்ப்பு என்ன ஆனது?” என கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுத் தரப்பில், மதுரைக் கிளையின் வரம்பிற்குட்பட்ட மாவட்டங்களில் எந்த நடவடிக்கையையும் தொடங்கவில்லை. விண்ணப்பங்களைக் கூட பெறவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது மாதிரி 2 வேறுபட்ட நிலை இருக்கும்போது, எதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்?. ஆகவே, இதற்கு தீர்வு காண்பது அவசியம். நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும்போது, தற்போது தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் நிரந்த பணி கோருவார்களே? நிதிதான் பிரச்சனை எனில், தொகுப்பூதிய அடிப்படையில், ஆசிரியர்களை நியமித்து, பின்னர் நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கலாமே? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, இந்த வழக்கில் இதுபோல 2 வேறுபட்ட நிலை இருப்பதால், எவ்வாறு கையாள்வது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக வழக்கை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-ம.பவித்ரா








