கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் காவல் விசாரணை, நீதிமன்ற விசாரணையின் போது 5,569 மரணங்கள் நிகழ்ந்து உள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
காவல் விசாரணை சித்திரவதைகள் தொடர்பாக மக்களவை உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், 2018 முதல் 2021 இடைப்பட்ட காலத்தில் 37 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் 348 பேர் போலீசார் விசாரணையின் போது உயிரிழந்துள்ளனர் என்றும், இதே கால கட்டத்தில் நீதிமன்ற காவலில் சிறையில் இருந்த 5,221 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் உள்துறை இணையமைச்சர் அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டு வாரியாக, ( 2018-2019-2020-2021 ) ஒப்பிடும் போது கடந்த 2020-2021 கால கட்டத்திலே போலீஸ் காவலில் உரிழந்தோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே நேரத்தில் நீதிமன்ற காவலில் சிறையில் இருந்தோர் உயிரிழந்த எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த 2018-19ல் காவல்துறை மரணங்கள் 11 ஆக இருந்த நிலையில், 2019-2020ல் 12 ஆகவும், 2020-2021ல் 2 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில், நீதிமன்ற காவலில் மரணங்களை பொறுத்த அளவில், 2018-2019ல் 89 ஆக இருந்த எண்ணிக்கை, 2019-2020ல் 57 ஆகவும், 2020-2021ல் 61ஆகவும் உயர்ந்துள்ளது.
இதேபோல, கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்த 5 காவல்துறை மரணங்களில் 11,25,000 ரூபாய் இழப்பீடு வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்து உள்ளது;
இதேபோல் 6 நீதிமன்ற மரணங்களில் 12,00,000 ரூபாய் இழப்பீடாக வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்ததாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.








