காதலிப்பதாக ஏமாற்றும் ஆண்களைப் பற்றிக் கவலைப்படாமல் பெண்கள் வாழ்வின் அடுத்தகட்ட முன்னேற்றத்தை நோக்கி செல்ல வேண்டும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள டான்போஸ்கோ பள்ளி அரங்கத்தில் “ஹெர் ஸ்டோரீஸ்” என்ற பெயரில் பெண் எழுத்தாளர்கள் எழுதிய 6 புத்தகங்கள் வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு புத்தகங்களை வெளியிட்டார்.
இதனையடுத்து மேடையில் பேசிய அவர், “நான் அரசியலில் வந்த உடன் எனது பிள்ளைகளை கவனிக்க மறந்து விட்டேன் இருப்பினும் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் என் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். நான் அரசியலில் இந்த நிலையை அடைவதற்கு எனது குடும்பமும் ஒரு முக்கிய காரணம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாரதியார் பிறந்த பூமி எங்க பூமி, எங்கள் ஊரில் பெண்கள் அதிகளவில் படித்துவருகிறார்கள், அப்போது இருந்து இப்ப வரைக்கும் பெண்கள் ஓரம்கட்ட படுகிறார்கள், எனக்கு கிடைத்த வாய்ப்பால் முன்னேறி வருகிறேன். லவ் பண்ணிட்டு ஏமாத்துறான் என்று தெரியும் பொழுது அவனை நினைத்துக் கவலைப்படாமல் அவனைக் கழட்டிவிட வேண்டும். உங்கள் வாழ்வில் அடுத்தகட்ட முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல வேண்டும்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.








