சாலை வசதி இல்லாததால் குருமலையை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உயிரிழந்த சம்பவம் குறித்து நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்ட நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட
குருமலை கிராமத்தைச் சார்ந்த பழனிச்சாமி என்பவர் கடந்த இரண்டு நாட்களாக
உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். சாலை வசதி இல்லாததால் மருத்துவமனை கொண்டு செல்ல முடியாமல் அவர் தவித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் மலை கிராம மக்கள் உடனடியாக அடர்ந்த வனப் பகுதிக்குள் தொட்டில் கட்டி சுமந்து சென்றனர். குருமலையிலிருந்து திரிமூர்த்தி மலை அடிவாரப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு மருத்துவமனையில் பழனிச்சாமி அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பழனிச்சாமியின் உயிர் பிரிந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் பழனிச்சாமியின் உடலை குருமலை கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர். 2006 வன உரிமைச் சட்டத்தின் படி சாலை உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற விரைவில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இவர்களின் நீண்ட நாள் கனவாக உள்ளது.
இறந்த பழனிச்சாமிக்கு மாசாணியம்மாள் (35) என்ற மனைவியும் மாரியப்பன் (15) என்ற மகனும் உள்ளனர். சாலை வசதி இல்லாததால் உடல்நிலை பாதிக்கப்படும் மலை கிராம மக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பது தொடர்ந்து வரும் நிலையில், இந்த சம்பவம் பொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்ட நிலையில், 2 மாதங்களில் சாலை அமைக்கப்படும் எனவும், மாதத்திற்கு இருமுறை குருமலை கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தப்படும் எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உறுதியளித்துள்ளார்.
இந்த முழு செய்தியையும் காணொளியாககாண:








