லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல், விஜய் சேதுபதி , ஃபகத் பாசில் என அசுரத்தனமான நடிகர் பட்டாளத்துடன் ரசிகர்களுக்கு அறுசுவையுடன் கூடிய அன்லிமிடெட் மீல்ஸ் வைக்க தயாராகி வருகிறது விகரம்..(Feel the bgm). அறுசுவையில் அத்தியாவசிய சுவையாக இருப்பது உப்புதான். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூட பழமொழி உண்டு. மற்ற சுவைகளையும் சமன் செய்யும் ஆற்றல் இந்த உவர்ப்புச் சுவைக்கு உண்டு. ‘விக்ரம்’ எனும் அன்லிமிடட் மீல்ஸுக்கான ‘உப்பு’ தான் அனிருத்!
‘நான் சினிமா பள்ளிகளுக்கு சென்றதில்லை..ஆனால் சினிமாவுக்கு சென்றுளேன்’ என்பது உலகப்புகழ் பெற்ற இயக்குநர் குவண்டின் டாரண்டோவின் Quote.டேரண்டினோவையே தன்னுடைய இன்ஸ்பிரேஷன்களில் ஒருவராக கொண்ட லோகோஷும் இதே போல் ஒரு கருத்தை மேடையிலேயே கமலை பக்கத்தில் வைத்துக்கொண்டே வெளிப்படுத்தியுள்ளார். ‘நான் யாருக்கிட்டையும் அஸிஸ்டெண்டா வேலை செஞ்சது இல்ல.. எந்த சினிமா இன்ஸ்டிடியூட்லயும் படிக்கல. நான் ஒன்னே ஒன்னுதான் பன்னிருக்கேன்! கமல் சார் படங்களை பாத்திருக்கேன்” என்பது தான் அது. லோகேஷை பொறுத்தவரை கமல் தான் தன்னுடைய ஆப்தர் (ஆப்தர் என்றால் என்னவென்று தெரியவில்லை. கமல் சார் இந்த வாக்கியத்தை பயன்படுத்தியுள்ளார். எனவே நிச்சயம் இது ஒரு நல்ல ஆளுமைக்கான வார்த்தையாக இருக்கும் என்று நம்பியே இங்கு பயன்படுத்துகிறோம் ) . அந்த ஆப்தரை வைத்து அவர் செய்யும் சம்பவம் தான் விக்ரம்(மீண்டும் feel the bgm).
லோகேஷுக்கு கமல் போல், கார்த்திக் சுப்பாராஜுக்கு ரஜினி . ஆனால் ‘ராக் ஸ்டார்’ அனிருத்துக்கோ ரஜினி -கமல் இருவருமே இரண்டு காதுகள் போல. இரண்டு காதுகளுக்குமே மாஸான, கிளாஸான இசை விருந்து வைக்க வேண்டும் என்பதே அவரின் நீண்ட நாள் ஆசை. ரஜினியை வைத்து கார்த்திக் சமைத்த பேட்டை திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தபோதிலும், தன்னுடைய இசையால் கொளுத்தியெடுத்து, கரைத்து ஊற்றி உப்பு போல் அந்த படத்தின் சுவையை சமன் செய்தார் ‘இசை ரவுடி அனிருத்’.
ஆஹா இதேபோல, நம்ம ஆண்டவருக்கும் அனிருத் தன் இசையால் எப்போது பூஜை செய்வார் என்று கமல் ரசிகர்கள் ஏங்கத்தொடங்கினார்கள். அனிருத் கமல் படத்தில் Onboard என்று தகவல் வந்ததுமே ‘சபாஷ் அனிருத்.. அப்படி வாங்க வழிக்கு..இந்த வழி நல்ல வழி’ என்று ஹார்ட்டீன்களை அள்ளி வீசினார்கள். ‘அனி’யும் தன்னுடைய கீபோர்டில் புல்லட்டுகளை லோட் செய்து விக்ரம் படத்தின் Teaser BGM-ல் சுட்டுத்தள்ளினார். விஜய்க்கு அரபிக் குத்து போடுவது போல, ஆழ்வார் பேட்டை ஆண்டவருக்கு ஒரு தெய்வீக ரௌதிரக்குத்தை போட்டு அமர்க்களப்படுத்தினார். கமலின் பழைய ‘விக்ரம்’ படத்திற்காக இளையராஜ போட்டிருந்த டைட்டில் ட்ராக்கையும் சேர்த்து தரமான ஒரு மியூஸிக்கல் ட்ரீட்டை கொடுத்தார்.
இந்நிலையில், வரும் மே-15ம் தேதி படத்தின் ட்ரெயிலருடன் பாடலும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை என்னவாகயிருக்கும்?, கமலின் கதாப்பாத்திரம் எப்படியிருக்கும்?, கைதியை போல கிளாஸ் ட்ரீட்டா? அல்லது மாஸ்டரை போல மாஸ் ட்ரீட்டா?, இல்லை இரண்டும் சேர்ந்த கலக்கல் ட்ரீட்டா? ‘ஜட்ஜ் பண்ணவே முடியலையே’ என மாப்பிள்ளை வடிவேலுக்காக காத்திருக்கும் கோவை சரளா போல் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றனர். இந்நிலையில் நம்முடைய 7ஆம் அறிவை பயன்படுத்தி சில ‘டாட்ஸ்’களை கனெக்ட் செய்து படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என்று கணித்துள்ளோம்.
கமலின் பழைய படங்களில் இருந்தே ஒரு கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து, அதே கதாப்பாத்திரத்தை தற்காலத்தில் நடக்கும் ஒரு கதைக்குள் பொறுத்தி கொளுத்தியெடுப்பதுதான் விக்ரம் படத்தின் கதைக்கரு என்று ஒரு தகவலும் பரவிவருகிறது. படத்தின் தலைப்பு விக்ரம் என்று வைக்கப்பட்டது, அதே பழைய படத்தில் இருந்து டைட்டில் மியூஸிக்கை பயன்படுத்தியதெல்லாம் அதற்கான ஹிண்ட் என்றும் கணிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் தலைசிறந்த Action Entertainer திரைப்படம் என்றால் விக்ரம்(1986)-ஐ சொல்லலாம். 35 ஆண்டுகளுக்கு முன்பே 1 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அப்படம் எடுக்கப்பட்டது.விக்ரம் (2022) படத்தின் glimpse வீடியோவில் கூட ‘Biggest Action Entertainer’ என்ற வாசகங்கள் இடம்பெறுவதை நாம் கவணிக்கலாம். ஆக, பழைய விக்ரமில் வந்த ‘ரா’ ஏஜெண்டான A.k.விக்ரம்(கமல்) எனும் கேரக்டரை அப்படியே புதிய விக்ரமுக்குள் கொண்டுவந்திருக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விகரம்(1986) படத்தை முதலில் மணிரத்னம் இயக்கவிருந்ததாகவும், சில காரணங்களால் அது சாத்தியமாகாமல் போனது என்றும் கூறப்படுகிறது. இப்படம் commercial hit என்று விக்கிபீடியா கூறினாலும், வசூல் ரீதியாக எதிர்ப்பார்த்த அளவு அப்படம் ஓடவில்லை என்பதே சினிமா ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. 100 நாட்கள் ஓடிய போதிலும் அதிக பட்ஜெட்டை ஈடு செய்யும் வகையில் வசூல் அமையவில்லை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், ஆண்டுகள் பல கடந்து மீண்டும் தன்னுடைய ராஜ் கமல் ப்ரொடக்ஷனில், அதே பெயரில் வசூலை வாரிக்குவித்து, விட்டதை பிடிக்கப்போகிறார் கமல் என்றும் கூறப்படுகிறது.
விகரம்(1986) படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. விக்ரம் (2022) படத்தின் இசைமைப்பாளர் அனிருத். இரண்டையுமே கமலின் ‘ராஜ்கமல் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தான் தயாரித்தது..தயாரிக்கிறது. So..? என நீங்கள் கேட்கலாம். ‘சோ’-லாம் இல்ல சும்மா சொன்னேன் என்று நான் மழுப்ப விரும்பவில்லை. அந்த கால இசை ரவுடி இளையராஜா, வருங்கால இசை விஞ்ஞானி அனிருத் என்று நாம் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். உலக நாயகன் கமலே அதை மறைமுகமாக ஒப்புக்கொண்டுவிட்டார் என்றே எடுத்துக்கொள்ளலாம்(sorry mr.தேவிஸ்ரீ பிரசாத்).
படத்தின் மேக்கிங் வீடியோ காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இதில் நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் இடம்பெற்றிருந்தார். இதை வைத்து பார்க்கும் போது மாஸ்டர் படத்தில் வந்தது போல் நிச்சயம் இரண்டு குத்துப்பாட்டுகள் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. யாருக்கு தெரியும் ஃபஹத் பாசிலுக்காக பறையிசையுடன், செண்டை மேலம் முழுங்க ஒரு கேரளா குத்து பாடலைக்கூட வைத்திருக்கலாம். விஜய் சேதுபதிக்கு விகரம்(1986)ல் இடம்பெற்ற “ஏன் ஜோடி மஞ்சக்குருவி” பாடலை கூட ரீமிக்ஸ் செய்து ‘அனி’ ஸ்டைலில் கொளுத்தி எடுத்து நம் ஸ்பீக்கரை பொளக்க வைக்கலாம் என்று கூட பேச்சுக்கள் அடிபடுகிறது. அப்புறம் என்ன மீதிய மே-15 தேதி ட்ரெயிலரும் பாடலும் வந்தவுடன் ஆரம்பிக்கலாங்களா..? விக்ரம்…(கோச்சிக்காம கடைசியா ஒருவாட்டி Feel the Bgm please)!










