கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி 28ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளையும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகளை திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெட்ரோல் நிலையங்கள் நேரக் கட்டுப்பாடின்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கண்காட்சி கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளில் 50% பார்வையாளர்கள் அமர்ந்து பார்வையிட மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி போன்ற பொதுமக்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் தீர்த்தமாடுதல் நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.







