கனியாமூர் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்கலாம்- உயர்நீதிமன்றம்

கனியாமூர் பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு நேரடி வகுப்புகள் தொடங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே 12ம்…

கனியாமூர் பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு நேரடி வகுப்புகள் தொடங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே 12ம் வகுப்பு மாணவி சந்தேகமான முறையில் உயிரிழந்தார். மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டம், கலவரமாக வெடித்தது. இதில் பள்ளி பஸ்கள், வாகனங்கள், முக்கிய ஆவணங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதையடுத்து அந்த பள்ளி மூடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த ஆய்வுக் குழு ஆய்வு செய்துள்ளதாகவும் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், கலெக்டர் அளித்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பள்ளியில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வகுப்புகளை நடத்த தயார் நிலையில் பள்ளி உள்ளதாகவும், பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதில்லை எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, கனியாமூர் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு மாத காலத்திற்கு நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். ஒரு மாதத்திற்குப் பின்னர் நிலைமையை பொறுத்து மற்ற வகுப்புகளை தொடங்குவது குறித்து முடிவு செய்யலாம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் சில நாட்களுக்கு பள்ளிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால் காவல்துறையிடம் மனு அளிக்கலாம் எனவும், அதற்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகம் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார். இதனையடுத்து பாதுகாப்புக்கு தேவைப்படும் காவலர்களின் எண்ணிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மற்றும் பள்ளி நிர்வாகம் கலந்தாலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.