நவம்பர் 1 முதல் மதுபான விலை ரூ.10 உயர்வு! காலி பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் பணம் வாபஸ் – டாஸ்மாக் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து வகையான மதுபானங்களின் விலையும் ரூ.10 உயர்த்தப்பட உள்ளது. அதேநேரத்தில், மது அருந்திய பிறகு காலி பாட்டில்களைத் திருப்பிக் கொடுத்தால் கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.10-ஐ நுகர்வோர் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) இது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை, மதுபான உற்பத்தியாளர்கள், கிடங்கு அதிகாரிகள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் மதுபானக் கடை ஊழியர்களுக்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம், காலி மதுபாட்டில்களைச் சேகரிக்கும் திட்டம் ஏற்கெனவே எதிர்ப்பு காரணமாக நடைமுறைப் படுத்தப்படாமல் இருந்த சென்னையின் மூன்று டாஸ்மாக் மாவட்டங்கள் உள்ளிட்ட மேலும் 5 மாவட்டங்களில் அமலுக்கு வரவுள்ளது.

முன்னதாக, மதுபானங்களின் விலையில் அதிகபட்சமாக ரூ.20 வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி விதிப்பதற்கான சட்ட மசோதாவை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே.விக்னேஷ் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார். இந்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைப் பயன்படுத்தி, மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலையைவிட (MRP) கூடுதல் தொகையை வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதைத் தடுக்கும் நோக்கிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் கே.விக்னேஷ் தெரிவித்திருந்தார்.

புதிய நடைமுறையின்படி, காலி பாட்டில் சேகரிப்புத் திட்டத்தைக் காரணம் காட்டி, நிர்ணயிக்கப்பட்ட புதிய எம்.ஆர்.பி. விலையைவிட கூடுதலாகப் பணம் வசூலிக்கக் கூடாது என டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே ரூ.10 சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரியாக விலையில் சேர்க்கப்பட்டுள்ளதால், அதற்கு மேல் பணம் வசூலிக்க அனுமதி இல்லை. அதேவேளையில், மதுபானம் வாங்கிய நுகர்வோர் காலி பாட்டில்களைத் திருப்பிக் கொடுத்தால், அவர்களுக்கு ரூ.10 திரும்ப வழங்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலையைவிடக் கூடுதலாகப் பணம் வசூலிப்பது அங்கீகரிக்கப்படாத வசூலாகக் கருதப்படும் என்றும், இதுகுறித்து புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் சுற்றறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, ரூ.10 நோட்டுகள் மற்றும் நாணயங்கள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய, டாஸ்மாக் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்குகள் உள்ள வங்கிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு ஐந்து மண்டல அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு மதுபானக் கடையிலும் நியமிக்கப்படும் ஊழியர்களே காலி பாட்டில்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர், டெண்டர் மூலம் நிரந்தரமாகப் பாட்டில்களைச் சேகரிக்கும் நிறுவனம் தேர்வு செய்யப்படும் வரை, அங்கீகரிக்கப்பட்ட இடைக்கால விற்பனையாளர்களிடம் (Approved Vendors) அவை ஒப்படைக்கப்படும்.

காலி பாட்டில்களைச் சேகரிக்கும் கூடுதல் பணிக்காக, இடைக்கால ஏற்பாடாக ஒவ்வொரு கடைக்கும் தினசரி குறிப்பிட்ட தொகையை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு நாளொன்றுக்கு ரூ.2,000 வரை வழங்கப்படும். மற்ற மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு ரூ.1,800-ம், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு ரூ.1,600-ம், கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு ரூ.1,500-ம் வழங்கப்படும். காலி பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்கான தொகை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி மூலம் ஈடுசெய்யப்படும் என்றும், இதற்கான வரவு செலவு கணக்குகளை மாவட்ட மேலாளர்கள் முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுபானம் வாங்கிய அதே கடைக்குத்தான் காலி பாட்டில்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தமிழகத்தில் உள்ள எந்தவொரு டாஸ்மாக் கடையிலும் காலி பாட்டில்களை ஒப்படைத்து ரூ.10-ஐப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கிடையே, இந்தப் புதிய நடைமுறைக்கு டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஏஐடியுசி இணைப்புப் பெற்ற டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.தனசேகரன் கூறுகையில், இவ்வளவு குறுகிய கால அவகாசத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவது சிரமமானது என்றார்.

மேலும், காலி பாட்டில்களைச் சேகரிப்பதற்கான நிரந்தர ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்ட பிறகே இத்திட்டத்தை அமல்படுத்தியிருக்க வேண்டும். இல்லையெனில், கூடுதல் பணிச்சுமை ஊழியர்களுக்கு ஏற்படும். கடைகளுக்கு வழங்கப்படும் தினசரி ரூ.2,000 தொகை, கூடுதல் பணியாளர்களுக்கான செலவு மற்றும் காலி பாட்டில்களைச் சேமித்து வைப்பதற்கான இட வாடகை உள்ளிட்ட செலவுகளுக்குப் போதுமானதாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.