1986ஆம் ஆண்டுக்குப் பிறகு, உலகக் கோப்பையை வெல்ல அர்ஜென்டினா போராடி வருகிறது. அந்த அணியின் கனவுகளை சுமந்து வரும் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, கடந்த வந்த உலகக் கோப்பைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
தொடர்ந்து 4 முறை பலோன் டோர் (ballon dor) விருது வென்று உலகின் அதிசிறந்த வீரராக கருதப்பட்ட மெஸ்ஸி, 2014ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஒட்டுமொத்த தேசத்தின் கனவுகளோடு களம் கண்டார். ஒரு சராசரியான அணியை வழிநடத்தும் பொறுப்பு அவரது தோள்களில் சுமத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிரேசிலில் நடந்த அந்த உலகக்கோப்பையில் குரூப் எப்-ல் இடம்பெற்றிருந்தது அர்ஜெண்டினா. போஸ்னியா அணியுடனான முதல் போட்டியில் 3 வீரர்களை கடந்து மெஸ்ஸி அடித்த கோல், அந்த அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இரண்டாவது போட்டியில் அர்ஜெண்டினாவுக்கு கடும் சவால் அளித்தது ஈரான். 90 நிமிடங்களைக் கடந்து ஆட்டம் டிராவை நோக்கி சென்றுகொண்டிருந்த போது, ஸ்டாப்பேஜ் நேரத்தில் அசாத்தியமாக கோல் அடித்தார் மெஸ்ஸி.
நைஜீரியாவுக்கு எதிரான 3வது போட்டியிலும் பம்பரமாய் சுழன்றது மெஸ்ஸியின் கால்கள். ஒரு ப்ரீ கிக் கோல் உட்பட 2 கோல்கள் அடித்த மெஸ்ஸி, தொடர்ந்து 3வது முறையாக ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
சுவிட்சர்லாந்து உடனான ரவுண்ட் ஆப் 16 போட்டியில் மெஸ்ஸியின் அபார ஆட்டத்தால் வெற்றி கண்ட அர்ஜெண்டினா அணி, காலிறுதியில் பெல்ஜியம் அணியை வீழ்த்தியது. 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக அர்ஜெண்டினாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார் லியோனல் மெஸ்ஸி. பரபரப்பான அந்த அரையிறுதி போட்டி பெனால்டி ஷூட் அவுட் வரை சென்றது. உலகக்கோப்பையின் மிகச்சிறந்த போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் அந்த மோதலில் 4-க்கு 2 என்ற கணக்கில் நெதர்லாந்தை வென்றது அர்ஜெண்டினா.
அர்ஜெண்டினாவின் 28 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் அந்த நாளும் வந்தது. பிரேசிலை அதன் சொந்த மண்ணில் பந்தாடிய ஜெர்மனியுடன் மல்லுக்கட்டியது அர்ஜெண்டினா. 90 நிமிடங்கள் முடிந்தும் கோல் இல்லாததால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது. சப்ஸ்டிடியூட்டாக வந்த ஜெர்மனி வீரர் மரியோ கோட்ஸே அர்ஜெண்டினாவுக்கு எமனாக மாறினார். 113வது நிமிடத்தில் அவர் அடித்த கோல் மெஸ்ஸியின் கனவை சுக்கு நூறாக்கியது. நொறுங்கிய இதயத்துடன் மைதானத்தை விட்டு தீரா துயருடன் வெளியேறினார் மெஸ்ஸி.
சராசரியான வீரர்களைக் கொண்ட அணியை தனது ஒப்பற்ற திறமையால் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற மெஸ்ஸிக்கு தொடரின் சிறந்த வீரருக்கான கோல்டன் பால் வழங்கப்பட்டது. உலகக்கோப்பையை வெல்வதையே வாழ்நாள் லட்சியமாய் கொண்டிந்த மெஸ்ஸி, ஆறுதலாய் கிடைத்த அந்த விருதை உடைந்த மனதுடனே பெற்றுக்கொண்டார்.
கனவை நனவாக்க மெஸ்ஸிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாய் அமைந்திருக்கிறது கத்தார் உலகக்கோப்பை. தனது கடைசி உலகக்கோப்பையில் களம் காணும் மெஸ்ஸி, அர்ஜெண்டினாவின் தாகத்தை தீர்த்தால், அழியாப் புகழை அடைவார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.