தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியாக இருந்து மறைந்த அருணகிரி நாதரின் வாழ்க்கை பயணத்தை இந்த கட்டுரையில் பார்க்கலாம்
மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியாக இருந்த அருணகிரிநாதர் தஞ்சை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தருமை ஆதீனத்தின் திருக்கூட்ட அடியவராக ஆதீன பயிற்சிபெற்றவர். பின்னர் மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானமாக 1975 ஆம் ஆண்டில் பட்டம் சூட்டப்பட்டார். சைவ சித்தாந்தத்தில் புலமைவாய்ந்தவர்.
உலகத்தில் உள்ள அனைத்து மதங்களுக்கும் இறைவன் ஒருவனே எனவே அனைவரும் சகோதர சகோதரிகள் என்கிற அடிப்படையில் இஸ்லாமிய, கிறிஸ்துவ சமய மேடைகளிலும் உரையாற்றினர். சைவ சிந்தாந்த ஆழத்தை பாமர மக்களும் எளிதில் புரியும் வகையில் எடுத்துசென்றவர்.
திருஞானசம்பந்த பெருமானின் பாடல்களை எளிமையான வகையிலே பொருளோடு அச்சிட்டு இலவசமாக வழங்க வேண்டும் என்பதே தனது ஆசை எனவும், ஆதீனத்தின் சார்பில் தரமான கல்வி நிறுவனத்தை உருவாக்க வேண்டும் எனவும் எண்ணிக்கொண்டிருந்தார்.
2019ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி திருவாவதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரனான ஸ்ரீமத் சுந்தரமூர்த்தியை மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக அறிவித்தார். 77வயது நிரம்பிய அருணகிரிநாதரான மதுரை ஆதீனத்திற்கு திங்கள்கிழமை மூச்சுத்திணறல் அதிகரித்ததால் மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.








