தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், ஏராளமான படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜெயகுமாரி, தற்போது வறுமையில் வாடும் நிலையில், அவருக்கு உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.
1970 – 80 களில் கவர்ச்சி நடிகையாக இருந்தவர் ஜெயகுமாரி. திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில், கவர்ச்சி பாடல்களுக்கு நடனம் ஆடும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது. இதனால் தமிழில் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடனும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடிகையாகவும், நடனக் கலைஞராகவும் பணியாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், அவரது கணவர் தயாரிப்பாளராகப் படம் தயாரித்ததில் பெரும் நட்டம் ஏற்பட மிகவும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டார். கடந்த ஓராண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ஜெயகுமாரியின் சிறுநீரகம் 50% பாதிப்படைந்துள்ளது. இதனால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். மேலும் அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்த அமைச்சர், நடிகை ஜெயக்குமாரிக்கு சிறந்த வகையில் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்.
அப்போது அமைச்சரிடம் நடிகை ஜெயக்குமாரி தற்போது தான் வறுமையில் வாடுவதாகவும் தம்மைத் தனது மகன்கள் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை அனாதை போல் இருப்பதாக வேதனை தெரிவித்தார். இதனால் தனக்கு இருக்க ஒரு வீடு வழங்கும் படியும், மாதம் உதவித்தொகை கோரியும் கோரிக்கை வைத்தார். உதவித்தொகை குறித்தும், வீடு வழங்குவது குறித்தும் நடவடிக்கை எடுப்பதாக அவருக்கு அமைச்சர் உறுதியளித்ததாக நடிகை ஜெயகுமாரி கூறினார்.