முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பட்டியலினத்தை சேர்ந்தவரை துணை முதல்வராக்கி விட்டு சமூகநீதி பற்றி பேசுங்கள்: வானதி சீனிவாசன்

கருணாநிதி குடும்பத்தைச் சாராத ஒருவர், திமுக தலைவராக வர முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ள கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்கி விட்டு சமூகநீதி பற்றி பேசுங்கள் என முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுளள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஏப்ரல் 3-ம் தேதி திமுக நடத்திய, அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு மாநாட்டில், பாஜகவை எதிர்த்தால் தான் அரசியல் நடத்த முடியும் என்ற நிலையில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஆம் ஆத்மி கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பாரத் ராஷ்ட்ர சமிதி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றய திமுக தலைவரும், முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக நீதி பற்றி பாடம் நடத்தியிருக்கிறார். “சமூக நீதியை காக்கும் கடமை நமக்கு தான் இருக்கிறது அதனால் தான் இணைந்துள்ளோம்” என்று தனது பேரூரையை தொடங்கிய முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள், “சமூக நீதி கருத்தியலை யார் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துதான், அதன் வெற்றியும் பலனும் இருக்கும்” என, பேசியுள்ளார்.

திமுக தலைவராகவும், தமிழ்நாடு முதலமைச்சராகவும் இருந்த அண்ணா மறைவுக்குப் பிறகு, 1969-ல் முதலமைச்சராகவும், பிறகு திமுக தலைவராகவும் ஆனவர் திரு. கருணாநிதி. 2018-ல் கருணாநிதி மறையும் அரை நூற்றாண்டு காலம் அவர் தான் திமுக தலைவர். 49 ஆண்டுகளும் திமுக தலைவர் பதவிக்கு வேறு ஒருவரின் பெயர் பரிசீலிக்கப்பட்டதே இல்லை. திமுகவிலிருந்து நீக்கப்பட்டு, திமுகவையே ஆட்சிக்கு வர விடாமல் செய்த எம்ஜிஆர் கூட, கருணாநிதியின் தலைமையை எதிர்க்கவில்லை. மகன் ஸ்டாலினுக்கு போட்டியிட வந்து விட்டாரே என்பதால்தான் வைகோவும் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

தந்தை கருணாநிதி மறைவுக்கு பிறகு மகன் ஸ்டாலின் திமுக தலைவராகி விட்டார். அரை நூற்றாண்டு கடந்தும் அப்பதவிக்கு பெயரளவில் கூட வேறொருவர் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொல்லி ஸ்டாலினும் முதல்வராகி விட்டார். 2019 லோக்சபா தேர்தலுக்கு பிறகு மகன் உதயநிதியை, திடீரென திமுகவின் இளைஞரணி தலைவராக்கி, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வைத்து, இப்போது அமைச்சராகவும் ஆக்கிவிட்டார். உதயநிதிக்கு மட்டுமல்ல, அவரது மகன் இன்பநிதிக்கு துணையாக இருப்போம் என, அமைச்சர்களே பேசும் அளவுக்கு ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்குண்டு இருக்கிறது திமுக.

தந்தை, மகன், பேரன் அடுத்து கொள்ளுப்பேரனையும் தயார்படுத்திக் கொண்டு, மற்ற தகுதியானவர்களுக்கு கிடைக்க வேண்டிய கட்சித் தலைமை, ஆட்சித் தலைமையை பறிப்பதற்கு பெயர் தான் திமுகவின் அகராதியில் சமூகநீதியா? திமுக என்ற அரசியல் கட்சியின் தலைவராக, திமுக ஆட்சிக்கு வந்தால் முதலமைச்சராக, என்றாவது ஒருநாள், கருணாநிதி குடும்பத்தைச் சாராத ஒருவர் வர முடியும் என்று அக்கட்சியைச் சேர்ந்தவர்களால் கூற முடியுமா?

திமுக தலைவர் பதவி, முதலமைச்சர் பதவி தான் ஒரு குடும்பத்திற்கு என்றாகி விட்டது. சமூகநீதி, சமூகநீதி என மேடை தோறும் முழங்கும், அதற்காக அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பை நடத்தும் திமுக, சமூகநீதியை ஓரளவுக்குவாவது நடைமுறைப்படுத்த துணை முதல்வராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்குமா? அல்லது உள்துறை, நிதி, வருவாய், தொழில், பொதுப்பணி போன்ற மிக முக்கிய துறைகளின் அமைச்சர்களாக பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமிப்பாரா? வாய்ப்பிருந்தும் இதனைச் செயல்படுத்துவதில் திமுகவுக்கு என்ன தயக்கம்?

இப்போது அமைச்சராக இருக்கும் மகன் உதயநிதி எந்த நேரத்திலும் துணை முதல்வராக்கப்படலாம் என திமுகவினரே பேசிக் கொள்கின்றனர். மகனுக்குப் பதிலாக, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை திரு. ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக்கி, சட்டப்பேரவையில் தனக்கு அருகில் அமர வைக்க வேண்டும். அதுதான் உண்மையான சமூகநீதியாக இருக்க முடியும். கிடைக்கும் மேடைதோறும் சமூக நீதி, சமூக நீதி என முழங்கினால் மட்டும் சமூக நீதி கிடைத்து விடாது. பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை துணை முதலமைச்சராக்கி விட்டு, அதன்பிறகு சமூக நீதி பற்றி பேசினால், வீடு தேடி சென்று ஸ்டாலினை பாராட்ட தயாராக இருக்கிறேன்.

“சமூகரீதியாக, கல்விரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களை கைதூக்கி விடுவதுதான் சமூகநீதி. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி, உயர் ஜாதி ஏழைகளுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு வழங்கி விட்டது. ஏழைகள் என்றால், அனைத்து ஏழைகள் என்று தானே இருக்க வேண்டும். அது என்ன உயர் ஜாதி ஏழைகள்?” என, திரு. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

10 சதவீத இடஒதுக்கீடு என்பது உயர் ஜாதி ஏழைகளுக்கானது அல்ல. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கானது (EWS). இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் வராத சமூகத்தைச் சேர்ந்த ஏழைகள் இதனால் பயன்பெறுவார்கள். இதனை மறைத்து விட்டு அரசியலுக்காக பேசியிருப்பது அவர் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல.

சமூகநீதியில் பெண்ணுரிமையும் ஓர் அங்கம். இதனை திரு. ஸ்டாலின் அவர்களே பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால், வாரிசு அரசியலில் கூட, மகளை விட்டுவிட்டு, மகனை தான் அமைச்சராக்கியிருக்கிறார். வாய்ப்பு மறுக்கப்பட்ட, வாய்ப்பே கிடைக்காது என்ற நிலையில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதுதான் சமூகநீதி. அதனை செய்து விட்டு இனி, சமூகநீதி பற்றி முதலமைச்சர் பேச வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram