தனது அப்பாவின் கனவை நனவாக்க தான் தொடர்ந்து பாடுபடுவேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு, டெல்லியில் அவரது சமாதி அமைந்துள்ள வீர் பூமியில் அவரது மகனும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவரோடு அவரது தங்கை பிரியங்கா காந்தி வத்ரா, மைத்துனர் ராபர்ட் வத்ரா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தனது அப்பாவின் பிறந்த நாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன், என் இதயத்தில் இருக்கிறீர்கள். நாட்டுக்காக நீங்கள் கண்ட கனவை நிறைவேற்ற நான் எப்போதும் முயற்சிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜிவ் காந்தியின் உரை, அவரது பயணங்கள், சந்தித்த தலைவர்கள் அடங்கிய வீடியோ ஒன்றையும் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், ராஜிவ் காந்தியின் சிறப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு உங்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜிவ் காந்தியின் பிறந்த நாளான இன்று அவருக்கு தனது அஞ்சலியை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.










