சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வெளியாக உள்ள மாவீரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகும் மாவீரன் திரைப்படம் அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தை 4,172 இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட வாய்ப்பிருப்பதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என பட தயாரிப்பு நிறுவன உரிமையளர் கே.வி.அருண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், பல மாதங்கள் உழைப்பில், மிகுந்த பொருட் செலவில், படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என வாதங்களை முன்வைத்தார்.
இதனை அடுத்து மாவீரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார்.







