லக்கிம்பூர் வன்முறை வழக்கில் உத்தரப்பிரதேச அரசின் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
லக்கிம்பூர் வன்முறை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தொடர்புடைய மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா நேரில் ஆஜராகவில்லை என்றும் நாளை காலை 11 மணி வரை அவர் ஆஜராகவில்லையெனில், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் எனவும் உத்தரப்பிரதேச அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்திய தண்டனை சட்டம் 302ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட வேறு யாரேனும் இதுபோன்று செய்திருந்தால், இப்படி தான் நடந்து கொள்வீர்களா? என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, லக்கிம்பூர் விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறும் உத்தரப்பிரதேச அரசின் அறிக்கை திருப்திகரமானதாக இல்லை என தெரிவித்தார். தொடர்ந்து வாதிட்ட உத்தரப்பிரதேச அரசு தரப்பு வழக்கறிஞர், நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் அரசின் நடவடிக்கை இருக்கும் என்றும், மாற்று விசாரணை அமைப்பு வைத்து வழக்கு விசாரிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தசரா விடுமுறைக்கு பின்னர், உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.







