லக்கிம்பூர் கெரி சம்பவம்; நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைப்பு

லக்கிம்பூர் கெரி சம்பவத்தில் மத்திய இணையமமைச்சர் ராஜினாமா செய்ய கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில்…

லக்கிம்பூர் கெரி சம்பவத்தில் மத்திய இணையமமைச்சர் ராஜினாமா செய்ய கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த அக்டோபர் 8ம் தேதி நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் கார் புகுந்தது. இதனையடுத்து ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.

விவசாயிகள் மீது மோதிய கார் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுடையதாகும். இதனால் அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு (SIT) நேற்று தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், இந்த சம்பவம் திட்டமிட்ட தாக்குதல் என்றும் இதில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இதனையடுத்து இன்று மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, “இணையமைச்சர் அஜய் மிஸ்ரா ஒரு குற்றவாளி. அவர் நிச்சயம் ராஜினாமா செய்ய வேண்டும்.” என்று வலியுறுத்தினார். மேலும் “சிறப்பு விசாரணைக்குழு விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம் ஒரு திட்டமிட்ட சதி என்று குறிப்பிட்டுள்ளது. இதில் ஈடுபட்டுள்ளது யாருடைய மகன் என்று எல்லோருக்கும் தெரியும். எனவே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க வேண்டும். ஆனால் ஆளும் கட்சியினர் இதனை தட்டிக்க கழிக்கின்றனர்.” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதன் காரணமாக அவையில் ஏற்பட்ட குழப்பத்தினால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.