வலிமைமிக்க தலைமை இல்லாததாலேயே அதிமுக கூட்டணி உடைந்து விட்டதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அசோக்நகர் 135வது வார்டில் விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அசோக்நகர் புதூர், திருவள்ளுவர் காலணி உள்ளிட்ட பகுதிகளில் பிரசார வாகனத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் விசிக 20க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடுகிறது. சென்னையில் 6 இடங்களில் தென்னை மர சின்னத்தில் போட்டியிடுகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வதற்கு இதுவே சாட்சி. அதிமுக பேச்சுவார்த்தை தொடங்கும் பொழுதே கூட்டணி உடைந்து விட்டது. அங்கே வலிமைமிக்க தலைமை இல்லை என்பதுதான் அடிப்படைக் காரணம்.” என்று கூறினார். மேலும்
“திமுக கூட்டணி ஆற்றல் வாய்ந்த தலைமை, தோழமை நிறைந்த தலைமை என்று இந்த தேர்தல் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த தேர்தலில் நீங்கள் அளிக்கும் வாக்கு விடுதலை சிறுத்தைகளுக்கு அளிக்கிற வாக்குகள் இல்லை சனாதன சக்திகளுக்கு எதிராக அளிக்கும் வாக்கு.” என்று பிரசாரம் மேற்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “சனாதன சக்திகளுக்கு எதிராக பாதுகாப்பு அரணாக இருக்கும் தென்னைமர சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்று தனது பிரசாரத்தில் திருமாவளவன் குறிப்பிட்டார்.








