தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர் நலச்சங்கங்களுடன் இன்று தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த 25ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளான இன்றும் போராட்டம் தொடர்வதால் மாநிலம் முழுவதும் பேருந்துகள் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த அளவிளான மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இன்று பிற்பகலில் சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நல ஆணைய வளாகத்தில், ஆணையர் லக்ஷ்மிகாந்த் தலைமையில் தொழிலாளர் நலச்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.







