திருமணமான 3 நிமிடத்தில் விவாகரத்து செய்த குவைத் தம்பதி! -ஏன் தெரியுமா?

குவைத்தில் திருமணம் முடிந்து வெறும் மூன்றே நிமிடங்களில் தம்பதி விவாகரத்து நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.  அவ்வாறான திருமண வாழ்க்கை  சிலருக்கு இனிமையாக அமைந்தாலும், சிலருக்கு அவ்வாறு…

குவைத்தில் திருமணம் முடிந்து வெறும் மூன்றே நிமிடங்களில் தம்பதி விவாகரத்து நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.  அவ்வாறான திருமண வாழ்க்கை  சிலருக்கு இனிமையாக அமைந்தாலும், சிலருக்கு அவ்வாறு அமைவதில்லை. பல ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்தவர்கள் கூட சில ஆண்டுகளில் விவாகரத்து செய்து கொள்கின்றனர்.  குறிப்பாக சமீபகாலமாக விவகாரத்து செய்துக் கொள்ளும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால்,  குவைத்தில் ஒரு தம்பதி மிகவும் குறுகிய நேரத்தில் விவாகரத்து செய்துக்கொண்ட சம்பவம் பேசும்பொருளாகியுள்ளது.

 

குவைத்தில் ஒரு ஜோடிக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.  எல்லா எதிர்ப்பார்ப்புகளுடன் திருமணம் செய்து கொண்ட அந்த தம்பதி திருமண நிகழ்ச்சிகள் முடிந்து அங்கிருந்து புறப்பட தயாராகினர்.  அப்போது, படிக்கட்டில் நடந்து வந்த மணப்பெண் கால் தடுமாறி கீழே விழுந்தார்.  அப்போது, கை கொடுத்து தாங்குவதற்கு பதிலாக மணமகன் ”முட்டாள், பார்த்து நடக்கமாட்டாயா?” என்று திட்டியுள்ளார்.  இது மணப்பெண்ணுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே இவ்வாறு அவமரியாதை செய்யும் கணவர், எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்வாரோ என்று நினைத்த மணமகள் உடனடியாக நீதிபதியை அணுகி, தனக்கு விவாகரத்து தருமாறு கேட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதியும் விவாகரத்து கொடுத்ததால், திருமணம் முடிந்து வெறும் 3 நிமிடங்களில் அந்த பந்தம் முடிவுக்கு வந்தது.

இந்த சம்பவம் சமூகவலைதளத்தில் வைரலானது.  அதற்கு இணையவாசிகள் சிலர் ‘மரியாதை இல்லாத உறவுகள் ஆரம்பத்திலேயே முடிவடைந்துவிடும்’ என கருத்து தெரிவித்தனர். இதேபோல், கடந்த 2004ம் ஆண்டில் பிரிட்டனில் திருமணம் முடிந்து வெறும் 90 நிமிடங்களில் ஒரு தம்பதி விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.