திரைப்பாடல்களில் ஆண்களே பெரும்பாலும் தங்கள் காதலை வெளிப்படுத்துவார்கள். ஆனால் பாட்டுடைத் தலைவி, மனத் தடைகள் ஏதுமின்றித் தன் உணர்வை அழகாக வெளிப்படுத்தும் சில பாடல்களும் உண்டு… வாருங்கள் பார்க்கலாம்…
‘தீர்க்க சுமங்கலி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ’ என்ற பாடலில், குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி, கொஞ்சிப் பேசியே அன்பைப் பாராட்டுது என, காதல் பொங்கிப் பிரவாகமெடுக்கும் வகையில் வரிகள் தந்திருப்பார் கவிஞர் வாலி. கண்ணதாசனால் மட்டுமே ஆழமும் கவியழகும் கொண்ட பாடல் வரிகளை எழுத முடியும் என்ற காலகட்டத்தில் அவருக்கு இணையாக வரிகளை தந்தவர் வாலி.
காதல் கொண்ட பெண் மல்லிகையை துணைக்கழைத்து இப்படி பாடினால், அந்தப் பெண்ணை வர்ணித்து பாடும் தலைவன், அல்லி என்றால் சந்திரனோடு, தாமரை என்றால் சூரியனோடு என மலர்களை ஒப்பிட்டு பாடுகிறான். எத்தனை பிறவி எடுத்தாலும் இந்த ஜோடிதான் சரியான இணை என சொல்லாமல் சொல்லியிருப்பார் வாலி…
காதல் கொண்ட பெண் இவ்வாறு பாடினால், கனவில் வந்த தனது மனங்கவர் மணாளன், கனவு முடிந்ததும் மாயமாகிவிட்டதாக எண்ணி கலங்குகிறாள் ஒருத்தி.. துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால், நெஞ்சத்தர் ஆவர் விரைந்து என்ற திருக்குறளை, அதாவது தூங்கும்போது கனவில் வந்தவர்தோள் அருகில் அமர்ந்திருந்தவர், விழித்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார் என பொருள் பொதிந்த குறளை உள்வாங்கி வரிகளை தந்திருப்பார் கவியரசு கண்ணதாசன்.
காலம் பல கடந்தாலும் காதல் வயப்பட்டவர்கள் தங்கள் உணர்வை வெளிப்படும் விதமும் முறையும் மாறாமல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
- ஜே.முஹமது அலி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







