குறைந்த அளவிலேயே கொரோனா தடுப்பூசிகள் போடப்படுவதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அளவில் ஒரு நாளைக்கு 17 லட்சத்துக்கும் குறைவாகவே தடுப்பூசிகள் போடப்படுவதாகவும், இதே நிலை நீடித்தால் 94 கோடி மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் ஆகிவிடும் எனவும் கூறியுள்ளார்.
18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போட தனியார் மருத்துவமனைகள் ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளதாகவும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட இது 6 மடங்கு அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான நாடுகள் கொரோனா தடுப்பூசியை இலவசமாகப் போடும் நிலையில் இந்தியாவில் மட்டும் தனியார் பலன் பெறும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா தடுப்பு விஷயத்தில் ஆமை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய அரசு, இனியாவது முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.







