கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு, தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
முழுமை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் கடமையாற்றுதல் என்ற பகவான் கிருஷ்ணரின் நித்திய செய்தி, இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு தேவையான உந்துசக்தியாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “மகாவிஷ்ணு எடுத்த 9வது அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும், பாண்டவரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.இந்த புனித நாளில் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்” என்றார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “தீமைகளை ஒழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடவிருக்கும் அனைவருக்கும் எனது கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
அநீதியை அழித்து, நீதியை நிலை நிறுத்துவதற்காக கிருஷ்ண பகவான் அவதரித்த நாளான கிருஷ்ண ஜெயந்தி நாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிருஷ்ண பகவான் அவதரித்ததற்கான நோக்கம் உலகில் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை பெருக வேண்டும் என்பது தான். அந்த நோக்கம் நிறைவேறி மக்கள் அனைவரும் அனைத்து நலன்கள் மற்றும் வளங்களுடன் வாழ்வதை உறுதி செய்ய பாடுபடுவோம்! என்று அந்த செய்தியில் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.








