வங்கி கொள்ளை விவகாரம் : அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்டு

அரும்பாக்கத்தில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வீட்டில் பதுக்கிய விவகாரத்தில், அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.   அரும்பாக்கம் தனியார் நகை கடன் வங்கியில் தங்க நகைகள் கொள்ளை போன விவகாரம் தொடர்பாக தனிப்படை…

அரும்பாக்கத்தில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வீட்டில் பதுக்கிய விவகாரத்தில், அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

 

அரும்பாக்கம் தனியார் நகை கடன் வங்கியில் தங்க நகைகள் கொள்ளை போன விவகாரம் தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி 32 கிலோ கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 28 கிலோ நகைகள் மட்டும் மீட்கப்பட்டன.

 

மீதமுள்ள நகைகள் எங்கு இருக்கிறது என காவல்துறையினர் துருவி துருவி நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொள்ளையன் சந்தோஷ் கொள்ளை சம்பவம் நிகழ்ந்த பிறகு இரண்டு மணி நேரம் பொழிச்சலூர் பகுதியில் சுற்றி வந்தது செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்த போது தெரியவந்தது. மேலும் அச்சரப்பாக்கம் ஆய்வாளர் அமல்ராஜின் மனைவி மெர்ஸியும், சந்தோஷின் மனைவி ஜெயந்தியும் உறவினர் என்பதும் தெரியவந்துள்ளது.

 

பின்னர் நடத்திய தொடர் விசாரணையில், அச்சரப்பாக்கம் ஆய்வாளர் மனைவி தனது வீட்டில் 3 கிலோ நகைகளை பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கு விரைந்து சென்ற போலீசார் 3.7 கிலோ நகைகளை பறிமுதல் செய்ததோடு, ஆய்வாளர் அமல்ராஜிற்கு கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய தகவலை, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறைக்கு தெரிவித்து விசாரிக்கும்படி சென்னை காவல்துறை கூறியுள்ளது.

அதேநேரத்தில்ட, ஆய்வாளர் அமல்ராஜ் மற்றும் அவரது மனைவி மெர்ஸிக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் எந்த மாதிரியான தொடர்பு உள்ளது என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜை சஸ்பெண்டு செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியபிரியா உத்தரவிட்டுள்ளார். மேலும் வேறு யாருக்காவது இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.