சென்னை புளியந்தோப்பு கே.பி பூங்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளைக் கட்டிய பிஎஸ்டி கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க ஐஐடி நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில், கே.பி. பூங்கா என்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், கட்டப்பட்டது. இந்த குடியிருப்புகள் தரமற்ற வகையில் கட்டப்பட்டுள்ளதாகவும், சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து, அமைச்சர்கள், அதிகாரிகள் குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த விவகாரம், சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரன், கட்டடங்களின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணிகள் ஐஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வறிக்கை கிடைத்ததும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டு இறுதிகட்ட அறிக்கையை ஐ.ஐ.டி. தலைமை செயற்பொறியாளர் பத்மநாபன் தலைமையிலான குழு இன்று சமர்பித்தது. இந்த அறிக்கையில் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமானம் தரமில்லாமல் உள்ளதா? குடியிருப்பின் பாகங்கள் இடிந்து விழ காரணம் என்ன? குடியிருப்பை கட்டியவர்கள் மீது என்ன நடவடிக்கை? அடுத்தகட்ட பணிகள் என்ன? என்பது தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் குடியிருப்பு தரமற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், பிஎஸ்டி கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.