கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீது, வரும் 7ம் தேதி விசாரணை நடைபெறுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக கோடநாட்டில் பங்களா ஒன்று உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் பல கோப்புகள், பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தின்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஓம்பகதூர் கொல்லப்பட்டார். அதன்பின் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக போலீசாரால் கருதப்பட்ட கனகராஜ், தினேஷ்குமார் ஆகியோர் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர், கொள்ளையில் முக்கிய மூளையாக செயல்பட்ட சயான் குடுமபத்துடன் காரில் செல்லும்போது நடந்த விபத்தில் சயானின் குடும்பத்தினர் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில். சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். அதன்பின் இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலை, கொள்ளை சம்பவத்துக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். இந்த வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் காவல்துறை சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள அனுபவ் ரவி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வருகிறது.







