8 லட்ச ரூபாய் கடனை தராததால் ஆட்டோ ஓட்டுநரை கடத்தியதாக கைது செய்யப்பட்ட 3 பேர் தெரிவித்துள்ளனர்.
சென்னை சூளைமேடு சக்திநகர் 4வது தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகரன். ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று காலை வீட்டிலிருந்தபோது, அடையளம் தெரியாத 3 பேர் வீட்டிற்குள் நுழைந்து, அவரை தாக்கி காரில் கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் சூளைமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து கோயம்பேடு அருகே அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சந்திரசேகரனை போலீசார் மீட்டனர். சந்திரசேகரனை கடத்திச் சென்ற பம்மலை சேர்ந்த சரவணகுமார், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தேவராஜன் என்ற மணி, ராசிபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் சந்திரசேகரனின் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், சந்திரசேகரன் ஏற்கனவே சென்னை ஜாம்பஜார் பகுதியில் முட்டை கடை நடத்தி வந்ததும், அவர் நாமக்கல் மாவட்டத்தில் முட்டை மொத்த விற்பனை செய்து வந்ததும், சந்திரசேகரன், சரவணகுமார் மற்றும் அவரது சகோதரர் தேவராஜனிடம் ரூ.8 லட்சத்திற்கு முட்டைகளை வாங்கி பணம் தராமல் இழுத்தடித்தது தெரிய வந்தது. ஒரு கட்டத்தில் முட்டை கடையை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளார். சூளைமேட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி ஆட்டோ ஓட்டி வந்ததும், இதனையறிந்த சரவணகுமார், தனது தம்பி தேவராஜன் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து, சூளைமேடு பகுதியில் வீட்டிலிருந்த சந்திரசேகரனை கடத்திச் சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர், சூளைமேடு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.






