தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று சிறுவாணி அணையில் கூடுதல் அளவு தண்ணீரை கேரள அரசு திறந்து விட்டுள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையராக பதவி ஏற்ற பிரதாப், மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை குறித்து நேரடிகள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதை அறிந்ததும், கடந்த வாரம் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் இது தொடர்பாக எடுத்து கூறினார். மேலும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க சிறுவாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, சிறுவாணி அணையில் நேரடி ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு, கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தினார். அதன் பேரில், தமிழகத்துக்கு வழங்கவேண்டிய தண்ணீரை திறந்துவிடும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கேரளா அரசுக்கு கடிதம் எழுதினார்.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, கேரள அரசு சிறுவாணி அணையில் தற்போது கூடுதல் அளவு தண்ணீரை திறந்துவிட்டுள்ளது. முன்னதாக சிறுவாணி அணையில் 49 எம்.எல்.டி தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு முதல் 101.4 எம்.எல்.டி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவு 49.5 அடியாக உள்ள நிலையில் தற்போது 12.5 அடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்