காஷ்மீர் விவகாரம் : மத்தியஸ்தம் செய்ய தயார் – அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 4 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பதோடு எல்லை பகுதிகளில் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் தீவிரபடுத்தியுள்ளது.

இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலிமையான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இந்த வரலாற்று மற்றும் வீரமிக்க முடிவை எட்ட அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். விவாதிக்கப்படாவிட்டாலும், இந்த இரண்டு பெரிய நாடுகளுடனும் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போகிறேன். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் தொடரும் காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக ஒரு தீர்வை எட்ட முடியுமா என்பதைப் பார்க்க உங்கள் இருவருடனும் நான் இணைந்து பணியாற்றுவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.