பாம்பலம்மன் கோயில் திருவிழா – அக்னி சட்டியை தலையில் சுமந்த பூசாரி!

குளித்தலை அருகே வேலாயுதம்பாளையம் ஸ்ரீ பாம்பலம்மன் கோயில் திருவிழாவில் கோயில் பூசாரி அக்னி சட்டியை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்தார்.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டம்,  குளித்தலை அருகே…

குளித்தலை அருகே வேலாயுதம்பாளையம் ஸ்ரீ பாம்பலம்மன் கோயில் திருவிழாவில்
கோயில் பூசாரி அக்னி சட்டியை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்தார்.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்டம்,  குளித்தலை அருகே வேலாயுதம்பாளையத்தில் ஸ்ரீ பாம்பலம்மன்
கோயில் உள்ளது.  இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறுவது
வழக்கம்.  அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த 22ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.   முதல் நாள் திருவிழா அன்று கோயில் கிணற்றில் ஸ்ரீ பாம்பலம்மனுக்கு கரகம் பளித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து,  தாரை தப்பட்டை முழங்க, வான வேடிக்கையுடன் ஸ்ரீ பாம்பாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து கோயிலில் குடி புகுந்தார்.  பின்னர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோயில் பூசாரி அக்னிசட்டியை தலையில் சுமந்து தீ பந்தம் எரிவதுடன் கோயிலை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதற்கு முன்னதாக ஸ்ரீ
பாம்பலம்மனுக்கு முன்பாக அக்னி சட்டியை வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.

தொடர்ந்து கோயில் முன்பு அக்னி சட்டியை வைத்தனர்.  பின்னர் பக்தர்கள்
நேர்த்திக்கடனாக வைத்திருந்த சூடங்களை போட்டு அக்னி சட்டியை பற்ற வைத்து,
கோயில் எதிரே சென்று வழிபட்டனர்.  இதனையடுத்து, அக்னி சட்டியை அருளுடன் ஓடி வந்த பூசாரி தலையின் மீது வைத்தனர்.

கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அக்னி சட்டியை பூசாரி தலையில் சுமந்தவாறு ஸ்ரீ பாம்பாலம்மன் கோயிலை சுற்றி வளம் வந்தார்.  அப்போது பக்தர்கள் மலர்களை தூவி ஸ்ரீ பாம்பலம்மனை வழிபட்டனர்.   இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.