கட்டுரைகள்

கல்லக்குடி கொண்ட கருணாநிதி


கட்டுரையாளர்: வரலாறு சுரேஷ்

அரசியலில் கோலோச்சிய மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை, அரசியல் உலகத்துக்கு அறிமுகம் செய்துவைத்த கல்லக்குடி போராட்டம் நடைபெற்ற நாள் இன்று….

5 முறை முதலமைச்சர், பல பிரதமர்களை உருவாக்கிய அரசியல் தலைவர், முத்தமிழறிஞர், மூத்த பத்திரிகையாளர், திரைப்பட வசனகர்த்தா…. இப்படி எண்ணற்ற அடையாளங்களால் நிறைந்தவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுகவை, ஆகப்பெரும் சாம்ராஜ்யமாக்கி, இன்று வரை அக்கட்சி ஆட்சியில் இருப்பதற்கும், எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கும் அட்சாரம் போட்டவர் கருணாநிதி.

அண்ணாவிடம் இருந்து அரசியலை மட்டும் கற்கவில்லை கருணாநிதி. அழகு தமிழில் பேசும் சொல்லாடலும், அதிரும் வார்த்தைகளில் நெருப்பை உமிழும் எதுகை மோனையும், இவரின் தனிச்சிறப்பு…

“போராட்டத்தாலும் உரிமைக்காக போராடுகிறவர்களாலும் நிறைந்த இயக்கம் திமுக”. இப்படி, மேடை தோறும் முழங்கிய கருணாநிதியை அரசியலில் அடையாளம் காட்டியதே 1953ல் நடந்த மும்முனைப் போராட்டம் தான். அந்த மும்முனைப் போராட்டம் தான், அரசியல் கட்சியாக தவழ ஆரம்பித்து 4 ஆண்டுகளே ஆகியிருந்த திமுகவுக்கு திருப்புமுனை போராட்டமாகவும் அமைந்தது.

கல்லக்குடி போராட்டம் நடைபெறுவதற்கு முன்பு, திருச்சியில் மாநாட்டில் பேசிய அண்ணா, “தம்பி கருணாநிதியிடம் எந்த காரியத்தை கொடுத்தாலும் அதை வெற்றிகரமாக நிறைவேற்றுவார். இந்தக் கல்லக்குடி போராட்டத்தையும் உன்னிடமே ஒப்படைக்கிறேன். போய் வா தம்பி போய் வா” என்று உரையை நிறைவு செய்தார். அடுத்து உரையாற்றிய கருணாநிதி, “கல்லக்குடிக்கு சென்று ரயில் தண்டவாளத்தில் தலையை வைப்பேன். அந்த ரயில் ஓட்டுனர் இரக்கம் இல்லாதவனாக இருந்தால், என் மீது அந்த ரயிலை ஏற்றட்டும். அப்போது என் கழுத்திலிருந்து வழியும் ரத்தத்தை எடுத்து அண்ணா அவர்களே, கல்லக்குடி என்று எழுதுவீர்களேயானால், நான் பிறந்த பயனை அடைவேன்” என்று உணர்ச்சித் தழும்ப பேசினார். இதன் தொடர்ச்சியாகவே ஜூலை 15ல் கல்லக்குடி போராட்டம் நடந்தேறியது.

திருச்சி அருகேயுள்ள கல்லக்குடியில் தனியார் நிறுவனம் சிமெண்ட் தொழிற்சாலை ஆரம்பிக்க, காலம் காலமாய் அழைக்கப்பட்டு வந்த கல்லக்குடி என்ற ஊரின் பெயர் டால்மியாபுரம் என மாற்றப்பட்டதை கண்டித்தே இந்த போராட்டம் திட்டமிடப்பட்டது. ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து ஈ.வி.கே.சம்பத் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, மற்றொரு பக்கம் கருணாநிதி தலைமையில் டால்மியாபுரம் பெயர் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதுதான் திட்டம்.

திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் ரயில் நிலையத்துக்கு காலையிலேயே வந்த கருணாநிதி, டால்மியாபுரம் என பொறிக்கப்பட்ட பெயர் பலகையில், கல்லக்குடி என்று எழுதப்பட்ட தாளை ஒட்டுகிறார். கருணாநிதியின் கரகரத்த குரல், கம்பீரமாய் ஒலிக்க, அவரை சூழ்ந்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும் உணர்ச்சி மிகுதியில் முழங்குகின்றனர். “டால்மியாபுரத்திற்கு கல்லக்குடி எனப் பெயர் மாற்றாவிட்டால், ரயிலை விட மாட்டோம்” என உறுதியுடன் முழக்கமிடுகிறார் கருணாநிதி…

என்ன நடந்துவிடும் என ஓரமாய் நின்றிருந்த காவலர்களுக்கு திடீரென அதிர்ச்சியளிக்கிறார் கருணாநிதி… தண்டவாளம் தட தடக்க வந்து நின்ற ரயிலின் முன்பு, குறுக்கே தலைவைத்து படுக்கிறார் கருணாநிதி. போராட்ட உணர்ச்சி மேலிட, தொண்டர்களால் கலவரமாகிறது தண்டவாளம்…. பெயர் மாற்றும் வரை எழுந்திருக்க மாட்டோம் என கருணாநிதி உள்ளிட்டோர் அறிவிக்க, கருணாநிதி உள்ளிட்ட 34 பேரை கைது செய்தது காவல்துறை… கருணாநிதிக்கு 5 மாதம் கடுங்காவல் சிறையும், 35 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது..

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட கருணாநிதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாக, தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே கல்லக்குடி போராட்டம் மக்கள் போராட்டமாக வெடித்தது. கவிஞர் கண்ணதாசன் கைது, ரயில் மறியல், தடியடி என வரலாற்றில் யாராலும் மறக்க முடியாத ஒரு போராட்டமாக பதிவானது கல்லக்குடி போராட்டம். இதன் தொடர்ச்சியாகவே குளித்தலை தொகுதியில் இருந்து, முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக பேரவைக்குள் காலடி எடுத்து வைத்தார் கருணாநிதி……….

இதன் தொடர்ச்சியாக 5 முறை முதலமைச்சர் பதவியேற்று, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார் கருணாநிதி. தற்போதும் அவரை முன்மாதிரியாக கொண்டே தமிழ்நாட்டில் ஆட்சியமைத்து மக்களை கவர்ந்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொன்விழா கண்ட நாயகராக வரலாற்றில் இடம்பிடித்த கருணாநிதியை, அரசியல் உலகமே திரும்பி பார்த்த ஒரு போராட்டமாக அமைந்தது தான் கல்லக்குடி போராட்டம் என்றால் அது மிகையில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மக்கள் வறுமையில் வாடும் போது மொழிக்கொள்கை தேவையா?

Arivazhagan Chinnasamy

ஆட்டக்காரர்களின் வெற்றிடத்தை நிரப்பிவிடலாம்… ஆளுமைகளின் வெற்றிடத்தை நிரப்பவே முடியாது…

அரும்பாக்கம் பெட் கோல்டு வங்கியில் கத்தி முனையில் கொள்ளை சம்பவம் நடத்தது எப்படி?

Dinesh A