மேகதாது அணை சர்வே பணிகள்: 29 துணை வன அதிகாரிகளை நியமனம் செய்தது கர்நாடகா!

மேகதாது அணை சர்வே பணிகளுக்காக 29 துணை வன அதிகாரிகளை கர்நாடக அரசு  நியமனம் செய்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில்…

மேகதாது அணை சர்வே பணிகளுக்காக 29 துணை வன அதிகாரிகளை கர்நாடக அரசு  நியமனம் செய்துள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் மேகதாது அணைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியிருப்பதாக அந்த மாநில முதலமைச்சர்  சித்தராமையா அறிவித்திருந்தார்.

மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை எனவும், இதுகுறித்து தமிழ்நாட்டிற்கு விளக்கம் அளிக்க முடிவு செய்துள்ளதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேகதாதுவில் ஒரு போதும் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு கூறி வருகிறது.

இந்நிலையில்,தமிழகத்தின் தொடர் எதிர்ப்பையும் மீறி, மேகதாது அணை கட்டுவதற்காக, எல்லையை அடையாளம் காணவும், சர்வே பணிகளை மேற்கொள்ளவும், 29 துணை வன அதிகாரிகளை கர்நாடக அரசு நியமனம் செய்துள்ளது. அவர்கள் சாம்ராஜ்நகர் சதுக்கத்தின் தலைமை வன காப்பாளர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 4-ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எல்லையை அடையாளம் காண அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உத்தரவிட்டிருந்தார். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்த நிலையில், மற்றொரு புறம் அணை கட்டும் பணிக்கான நடவடிக்கைகளை கர்நாடகம் மேற்கொண்டு வருவதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.