கர்நாடக தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான மக்களின் தீர்ப்பு : சித்தராமையா பேட்டி

கர்நாடக தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான மக்களின் தீர்ப்பு என கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று…

கர்நாடக தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான மக்களின் தீர்ப்பு என கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்பதால், இன்று பிற்பகலுக்குள் கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரிந்துவிடும்.

பகல் 2 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 136-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 64 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 தொகுதிகளிலும் , பிற கட்சிகள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக முன்னிலையில் உள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்ததாவது…

“ இது மதசார்பற்ற கட்சிக்கு கிடைத்த வெற்றி. உறுதியான ஆட்சி அமைய வேண்டும் என்று கர்நாடக மக்கள் விரும்பி காங்கிரசுக்கு ஆட்சியை வழங்கியுள்ளனர். ஆபரேஷன் தாமரைக்கு பா.ஜ.க அதிக பணம் செலவழித்தது. ஆனால் ராகுல் காந்தியின்  பாதயாத்திரை, கட்சியினரை உற்சாகப்படுத்த உதவியது.

இந்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஜேபி நட்டாவுக்கு எதிரான மக்களின் தீர்ப்பு . இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி 20 முறை கர்நாடகா வருகை தந்தார்; கடந்த காலத்தில் எந்த பிரதமரும் இப்படி பிரச்சாரம் செய்யவில்லை.

இந்த தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற  தேர்தலுக்கான முன்னோட்டம்.  பாஜக அல்லாத அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை தோற்கடிக்கும் என நம்புகிறேன்.” என சித்தராமையா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.