கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் என்று கர்நாடக மாநில பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா அறிவித்துள்ளார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதற்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது. பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய நிலையில், 130க்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக 65 தொகுதிகளில் வெற்றி பெற்று 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சைகள் 2 இடத்திலும், பிற கட்சிகள் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை மாலை 5.30 மணிக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா அறிவித்துள்ளார்.







