தேசியக் கல்விக்கொள்கையை நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படுவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்த தேசிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இக்கல்விக் கொள்கையை முதன் முதலாக கர்நாடகா அரசு தனது மாநிலத்தில் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த தகவலை மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
ஆனால், கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாநில அரசு அவசரகதியில் தேசியக் கல்விக்கொள்கைக்கு அனுமதியளித்துள்ளதாகவும், கல்வியாளர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் கருத்துகளை கேட்காமல், அதன் நிறை குறைகளை ஆராயாமல் இந்த முடிவை மாநில அரசு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்கள் 40% மதிப்பெண்களை ஆன்லைன் மூலமாக பாடம் கற்று பெற வேண்டும். கல்லூரிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதன் மூலம் பல்கலைக்கழகங்கள் தொலைதூர கல்வி நிலையங்களாக மாற்றப்படும் நிலை ஏற்படும். மேலும் ஓராண்டு, 2 ஆண்டு படிப்புகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிலையை ஏற்படுத்துகிறார்கள் என்றும் இதன் மூலம் ஆசிரியர்கள் வேலையிழப்பார்கள் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.







