கர்நாடக சட்டமன்ற தேர்தல் – அதிக மற்றும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் விவரம்

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் மற்றும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை காணலாம். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.…

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் மற்றும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை காணலாம்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்தது. இதில், காங்கிரஸ் கட்சி 136 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக, இந்த தேர்தலில் பாஜக ஆட்சியில் இருந்த 13 அமைச்சர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் மற்றும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம்.

கர்நாடகாவின் கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சிவகுமார் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 332 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சிக்கோடி சடல்கா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ் பிரகாஷ் ஹுக்கரி 78 ஆயிரத்து 509 வாக்குகள் வித்தியாசத்திலும், அதணி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமி சங்கப்பா சவாதி 76 ஆயிரத்து 122 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

இதேபோல, அரபாவி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பாலச்சந்தர் லஷ்மண் ராவ் ஜர்கிஹோலி 71 ஆயிரத்து 540 வாக்குகள் வித்தியாசத்திலும், யலங்கா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எஸ்.ஆர்.விஸ்வநாத் 64 ஆயிரத்து 110 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதேபோன்று, ஜெயாநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.கே.ராமமூரத்தி குறைந்தபட்சமாக 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தினேஷ் குண்டுராவ் 105 வாக்குகள் வித்தியாசத்திலும்,சிரிகிராணி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்கவுடா 201 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

மாலூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நஞ்சகவுடா 248 வாக்குகள் வித்தியாசத்திலும், கும்டா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தினகர் கேசவ் ஷெட்டி குறைந்தபட்சமாக 676 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.