இந்தியன் -2 திரைப்படத்தின் பிரதான காட்சியை பார்த்து வியந்த கமல்! இயக்குனர் ஷங்கருக்கு பரிசு அளித்து பாராட்டு!

இந்தியன் – 2 திரைப்படத்தின் பிரதான காட்சியை பார்த்த கமல்ஹாசன்,  இயக்குனர் ஷங்கரை பாராட்டி பரிசளித்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.  ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படம் விபத்து உள்ளிட்ட…

இந்தியன் – 2 திரைப்படத்தின் பிரதான காட்சியை பார்த்த கமல்ஹாசன்,  இயக்குனர் ஷங்கரை பாராட்டி பரிசளித்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

இந்த படத்தில் மறைந்த நடிகர் விவேக், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானிசாகர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, மனோபாலா, சமுத்திரக்கனி, ஜார்ஜ் மரியான், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்தியன் 2 படப்பிடிப்பு Taipei நாட்டில் நடந்து வந்ததை அடுத்து, தென்னாப்பிரிக்கா நாட்டில் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தது.

அதை தொடர்ந்து படத்தின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் இணைந்து படத்திற்கான இசையை உருவாக்கி வரும் வீடியோ அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதோடு, இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்துடன் முடிவடியவுள்ளதாகவும், அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் என்றும் தகவல்களால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்நிலையில், இயக்குனர் ஷங்கரை பாராட்டி கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் இயக்குனர் ஷங்கர். இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி என்று பதிவிட்டுள்ளார். அதோடு, விலை உயர்ந்த கை கடிகாரம் ஒன்றையும் இயக்குனர் ஷங்கருக்கு கமல்ஹாசன் பரிசளித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.