‘இந்தியன் 2’ திரைப்படத்தில் பெண் வேடத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானிசாகர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, மனோபாலா, சமுத்திரக்கனி, ஜார்ஜ் மரியான், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
கதை, கதாபாத்திரங்களுக்கு ஏற்றவிதமாக தோற்றத்தை மாற்றும் நடிகர்களில் முதன்மையானவர் கமல்ஹாசன். அவ்வை சண்முகி’ திரைப்படத்தில் பெண் வேடமிட்டு கமல்ஹாசன் நடித்த காட்சிகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அவ்வளவு தத்ரூபமாக பெண் வேடத்தில் அசத்தி இருப்பார்.
‘அவ்வை சண்முகி’ திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தைத் தொடர்ந்து ‘தசாவதாரம்’ படத்திலும் வயதான பாட்டி கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். அதில் 10 விதமான கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் முக்கியமான காட்சி ஒன்றில் கமல்ஹாசன் பெண் வேடமிட்டு நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.









