ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த கலாநிதி மாறன் சிறப்பு பரிசு ஒன்றை வழங்கினார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ள இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது. இதுவரை சுமார் 525 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஜெயிலர் படம் அபார வெற்றி பெற்றதையடுத்து நடிகர் ரஜினிகாந்தை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நேற்று நேரில் சந்தித்தார். அப்போது ரஜினிக்கு காசோலை ஒன்றை அவர் பரிசாக வழங்கினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகின்றன







