கலைமாமணி விருதாளர்களுக்கு அரசுப் பேருந்துகளில் வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பாஸ் அளிக்க வேண்டும் என நடிகர் எஸ்.வி.சேகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பிலும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று மாலை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், மூன்றாவது நாளாக கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில் ‘மும்முடிச்சோழன்’ என்ற பெயரில் நாடக அரங்கேற்றம் நடைபெற்றது. தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் தலைவரும், நடிகருமான வாகை சந்திரசேகர் தலைமையில் மேடைபேற்ற இந்த நிகழ்ச்சியில், நாடகம் மற்றும் திரைப்பட நடிகரான எஸ்.வி.சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், இந்த நிகழ்ச்சிக்கு நான் ஒரு கலைஞனாக வந்திருக்கிறேன். நான் எப்படிப்பட்ட இடத்தில இருந்தாலும் ஒருபோது எனது நேர்மையையும், கொள்கையையும் நான் யாருக்காகவும் விட்டுக் கொடுத்தது இல்லை. அதேசமயம், மாற்றுக் கருத்துள்ளவர்களுடனும் நான் நட்பு பாராட்டுவதுதான் எனது வெற்றிக்கு மிக முக்கிய காரணம். என்னுடைய பிரதான தொழிலே நாடகமும், சினிமாவும்தான். அரசியல் என்பது சமூகசேவை செய்ய அங்கீகாரம் உள்ள ஒரு இடம் அவ்வளவுதான். இந்த மன்றத்தில் நான் ஆயிரம் முறை நாடகக் காட்சிகள் நடத்தியுள்ளேன்.
இந்தியாவின் எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் நாடகக் கலைஞர்கள் சிறப்பாக உள்ளனர். நான் தமிழ்நாடு அரசிற்கும், இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர், செயலாளர் ஆகியோருக்கும் இந்த மேடையில் ஒரு கோரிக்கையை முன் வைக்க விரும்புகிறேன். கலைமாமணி விருது பபெற்ற விருதாளர்கள் அனைவரும் தம் வாழ்நாள் முழுவம் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய பாஸ் வழங்க வேண்டும். அதற்காக தமிழக அரசிடம் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
நடிகர் எஸ்.வி.சேகரின் பேச்சிற்கு பதிலளித்து பேசிய, இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர் , எனது 40 ஆண்டு கால நண்பரான எஸ்.வி.சேகர் இந்த கோரிக்கையை ஏற்கனவே என்னிடம் வலியுறுத்தி இருந்தார். இதை நிச்சயமாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதனை நிறைவேற்ற ஆவண செய்வோம்’ என கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா








