கச்சநத்தம் மூவர் கொலை வழக்கு: தீர்ப்பு ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேர் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்த நீதிபதி தீர்ப்பை வரும் 5 ஆம் தேதி ஒத்திவைத்தார்.…

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 3
பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேர் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்த நீதிபதி தீர்ப்பை வரும் 5 ஆம் தேதி ஒத்திவைத்தார்.

திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம்
28 ஆம் தேதி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆறுமுகம், சந்திரசேகர், சண்முகநாதன் ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் 33 பேர்
மீது பழையனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்ட
நிலையில் இந்த வழக்கு சிவகங்கை ஒருஙகிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகளின் உறவினர்கள் நீதிமன்றத்தில் அதிக அளவில் கூடியதால் தீர்ப்பு 1 ஆம் தேதி ஒத்திவைத்தார். அன்றும் அதிகளவில் கூட்டம் கூடியதுடன் பாதுகாப்பு காரணங்களுக்காக தீர்ப்பு தேதியை ஒத்திவைக்கவும், வீடியோ கான்பரன்ஸிங் மூலம் தீர்ப்பை வழங்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இன்று வீடியோ கான்பரன்ஸிங் மூலம் தீர்ப்பை வழங்கவிருந்தது.

இந்நிலையில், குற்றவாளிகளிடம் இன்று வீடியோ கான்பரன்ஸிங் மூலம்
தண்டனை குறித்து கருத்துகள் மற்றும் இரு தரப்பு வழக்கறிஞர்களின்
இறுதி கருத்துக்களை கேட்ட பின்னர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என
நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.