முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

கலவர பூமியானது காபூல் ஏர்போர்ட்


சி.பிரபாகரன்

கட்டுரையாளர்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல காபூல் விமான நிலையத்தில் குவிந்த மக்களால் போர்களமாக மாறியுள்ளது அந்த விமான நிலையம்.

விமான இன்ஜின் சத்தத்தைத் தாண்டிய ஒலியாக இருக்கிறது, காபூல் விமான நிலையத்தில் ஒலிக்கும் அழுகையின் ஓலம். பேருந்துகளின் மீதும், ரயில்களின் மீதும் ஏறித் தப்பிக்கும் கூட்டங்களை மட்டுமே இதுவரை கண்ட உலகம், முதன்முதலாக நூற்றுக்கணக்கானோர் விமானத்தின் மீது ஏறித் தப்பிக்க முயன்ற காட்சியைக் கண்டு அதிர்ந்து போனது. தான் தப்பித்தால் போதும் என போராடும் கூட்டம் ஒருபுறம், தான் தப்பிக்க இயலாவிட்டாலும் தன் குழந்தை தப்பித்தால் போதும் என பாசப்போராட்டம் நடத்துபவர்கள் ஒருபுறம் என, போர்க்களமாகக் காட்சியளிக்கிறது காபூல் விமான நிலையம். ஆஃப்கானிஸ்தானில் தலிபானின் ராஜ்ஜியமும் அடக்குமுறையும் மொத்தமாக விமான நிலையத்தில் மட்டும் தான் உள்ளது என்பது போல, பல சம்பவங்கள் விமான நிலையத்திலேயே அரங்கேறின.

ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றியது முதலே, காபூல் விமான நிலையத்தில் குவிந்த மக்கள் கூட்டமும், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விமானம் விமானமாக அலைமோதியதுமே அதிகம் பேசப்பட்டது. காபூல் நகரிலிருந்து 16கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஹமீத் கர்சாய் விமான நிலையம். இது 1960களில் சோவியத் பொறியாளர்களால் கட்டப்பட்டது. ஆஃப்கானிஸ்தானின் முதன்மை விமான நிலையமாகக் கருதப்படும் இந்த விமான நிலையம், நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களை நிறுத்தும் திறன் கொண்டது. ஜூலை மாதத்தில் காபூல் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பல பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றினர். காபுலின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் ராணுவம் மற்றும் காவல்துறை, விமான நிலையத்திலிருந்து தங்கள் பாதுகாப்புப் படைகளை விலக்கிக் கொண்டது. இதனால், காபூல் விமான நிலையம் நேட்டோ படைகள் மற்றும் ஆப்கான் ராணுவ கமாண்டோ கார்ப்ஸின் கீழ் தற்காலிமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான், ஆகஸ்ட் 16ம் தேதி முதல், காபூல் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. எனினும், மக்களை வெளியேற்றப் பயன்படுத்தப்படும் அமெரிக்க விமானப்படையின் விமானங்கள் காபூல் விமான நிலையத்தில் தரையிறங்கின. சில நூறு பேரை மட்டுமே ஏற்றிக்கொள்ள இயலும் திறன் கொண்ட விமானங்கள் மீது ஆயிரக் கணக்கானோர் ஏற முயன்ற வீடியோ இணையத்தில் வெளியானது.

அப்போது தான், ஆஃப்கானிஸ்தான் மக்களின் அவல நிலையையும், அங்கிருந்து வெளியேற துடிப்பதையும் உலகம் அறிந்து அதிர்ந்தது. விமானம் பறந்துகொண்டிருந்தபோது, விமானம் மேலே ஏறிப் பயணித்த கால்பந்து வீரர் உட்பட 3 பேர், கீழே விழுந்து இறந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விமான நிலையத்துக்குள் தப்பி ஓட நினைப்பவரைத் தடுக்கும் முள்வேலிகள், அதனையும் தாண்டி கடக்க முயலும் மக்கள், கூட்டம் கூட்டமாக குடும்பங்கள் அமர்ந்திருக்கும் ரன்வே என விமான நிலையமே வினோத நிலையமாகக் காட்சியளித்தது.

விமான நிலைய முள்வேலி சுவரை தாண்டி, ”என் குழந்தையை காப்பாற்றுங்கள்” என, பல குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை பிற நாட்டு ராணுவத்தினரிடம் ஒப்படைக்க முயலும் காட்சிகள் உலகை உலுக்கியது. உடல்நலம் குன்றிய தந்தை, தன் குழந்தையைக் காப்பாற்றுமாறு, அமெரிக்க ராணுவத்தினரிடம் கெஞ்ச, குழந்தைக்கு உடனே மருத்துவ சிகிச்சை அளித்து மீண்டும் அந்த தந்தையிடமே ஒப்படைக்கப்பட்டது. தாயை பிரிந்து வாடிய 2 மாத குழந்தையை, துருக்கி ராணுவ வீரர்கள் தங்கள் கைகளில் அள்ளி நெஞ்சோடு அனைத்து தாலாட்டும் காட்சிகள், இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது.

விமான நிலையத்தின் உள்ளே செல்ல முடியாமல், வெளியேறவும் முடியாமலும், விமான நிலைய முள்வேலி சுவர்களுக்குள்ளேயே அகதிகளாய் வாழும் நிலையே, தற்போது காபூல் விமான நிலையத்தில் நிலவுகிறது.

Advertisement:
SHARE

Related posts

’மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்’: கமல்ஹாசன் ட்வீட்!

Halley karthi

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம்

Ezhilarasan

இளைஞரை மரத்தில் கட்டிவைத்து கொடூரமாக தாக்கியவர்கள் கைது!

Jeba Arul Robinson