மெட்ரோ இரயில் பணிகளில், தமிழ்நாட்டினருக்கு வேலை வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை மெட்ரோ இரயில் பணிகளில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வலியுறுத்தி, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், மாதவரம் – புரசைவாக்கம் வரை டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட், மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. ஆனால், அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என புகார் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு – ஏற்பாடுகள் தீவிரம்
மேலும், கொரோனா தொற்று பரவல் அனைவரின் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது எனவும், வேலை வாய்ப்பு வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள திட்டங்களுக்கு உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ள அவர், சென்னை திட்டத்தில், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதை அறிந்து தான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் உள்ள டாட்டா ப்ராஜெக்ட்ஸ் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, யாரும் சரியான பதில் அளிக்கவில்லை என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்.பி கலாநிதி வீராசாமி குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








