ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நீதி, தர்மம், உண்மை வென்றது என்றும் இனி அதிமுக என்பது ஒன்றுதான் என இபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயரிநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில்அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு குறித்து, சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளது. அதிமுக என்பது ஒன்றுதான். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும். கட்சிக்கு எதிரானவர்களை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் தொடரும். கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும். ஒரு சிலரை தவிர. கட்சியால் வளர்ந்தவர்கள் கட்சிக்கு துரோகம் செய்தனர். ஆயினும் அதிமுக பலம் பொருந்திய கட்சியாக உருவாகியுள்ளது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.








