காலை இழந்த ஜூடோ விளையாட்டு வீரர்: மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் கேள்விக்குறியான எதிர்காலம்!

மதுரையில் மின்வாரியத்தின் அலட்சியத்தால் நிகழ்ந்த விபத்தில் ஜூடோ விளையாட்டு வீரரின் கணுக்கால் நொறுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான பரிதி விக்னேஸ்வரன் பல்வேறு ஜூடோ போட்டிகளில்…

மதுரையில் மின்வாரியத்தின் அலட்சியத்தால் நிகழ்ந்த விபத்தில் ஜூடோ விளையாட்டு வீரரின் கணுக்கால் நொறுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான பரிதி விக்னேஸ்வரன் பல்வேறு ஜூடோ போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். அடுத்த மாதம் மாநில அளவில் நடைபெறும் ஜூடோ போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கோச்சடை பகுதியில் தனது நண்பர் வீட்டுக்கு பரிதி சென்ற போது அங்கு பழுதான மின்கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் கிரேன் மூலம் அகற்றி மற்றொரு புதிய மின்கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த சமயத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பரிதி விக்னேஸ்வரன் மீது மின்கம்பம் திடீரென விழுந்ததில் மாணவனின் இடது கணுக்கால் முறிந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் துடிதுடித்த அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மின்கம்பம் மாற்றும் பணியின் போது, அறிவிப்பு பலகை வைக்காமலும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றாமலும் மின்வாரிய அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டதே ஜூடோ வீரர் பரிதி விக்னேஸ்வரனின் கால்முறிவுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அவருடைய எதிர்காலம் கேள்விக்குறி ஆகியிருப்பதாகவும் பரிதியின் தாயார் வேதனை தெரிவித்துள்ளார்.

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் தனது வாழ்க்கையே போய்விட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞர் உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார். விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை செய்து போலீசாக வேண்டும் என்ற தனது கனவு முடிவுக்கு வந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ள பரிதி விக்னேஸ்வரன், தமிழ்நாடு அரசு தனக்கு உரிய நிவாரணமும் வேலையும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். தம்முடைய தாயும், தாமும் மாற்றுத் திறனாளி என்றும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் ஓரிரு வாரங்களில் நடைபெறும் ஜூடோ போட்டிக்கான தேசிய போட்டியில் கலந்து கொள்ள தயாராக இருந்த மாணவன் பரிதி விக்னேஸ்வரன் மின் வாரிய துறையின் அலட்சியமான பணியால் கால் துண்டாகி தற்போது மாணவனின் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாய் இருப்பதாக மாணவனின் நண்பர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மின்கம்பம் பொருத்தும் பணியின் பொழுது அலட்சியமாக எந்தவிதமான பாதுகாப்பு மற்றும் முன்னறிவிப்பு இன்றி பணிகள் மேற்கொண்ட கிரேன் ஆபரேட்டர் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் இருவர் என மூன்று பேர் மீது மீது எஸ் எஸ் காலனி காவல்துறையினர் வழக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து நியூஸ்7 தமிழ் அறச்சீற்றம் பகுதியின் காணொலியை காண:

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.