நடிகர் ஆதி நடித்து வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆதியை கதாநாயகனாக கொண்டு கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் ‘மரகத நாணயம்’. இந்த படத்தில் நிக்கி கல்ரானி, ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ், டேனியல், முனிஷ்காந்த் உள்ளிட்ட நடிகர் பட்டாளமே நடித்திருக்கும். இந்தப் படத்தை ஏ.ஆர்.கே.சரவன் இயக்கியிருந்தார். டில்லி பாபு தயாரித்திருந்தார்.
திபு நினன் தாமஸ் இசையமைத்திருந்த இப்படத்தின் ‘நீ கவிதைகளா’ பாடல் பெரிய அளவில் ஹிட்டடித்து இன்றும் இன்ஸ்டா ரீல்ஸ்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த பாடல் ஒலித்தாலே இரண்டு நிமிடம் நின்று பார்த்துவிட்டு செல்வதும், அந்த நாள் முழுவதும் அதே பாடலை முணுமுணுப்பதும் பலரின் இயல்பாகவே உள்ளது. பாடல் மட்டுமல்லாமல் படமும் ரசிகர்களிடையே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியை வைத்து ஏ.ஆர்.கே.சரவன் ‘வீரன்’ படத்தை இயக்கியிருந்தார். அந்தப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், அடுத்து ‘மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் சரவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தையும் டில்லிபாபுவே தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனரின் இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.







