மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவை சூழ்ந்த பத்திரிக்கையாளர்கள்; வாக்குச்சாவடியில் தள்ளுமுள்ளு

உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கச் சென்ற அமைச்சர் அஜய் மிஷ்ராவை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டதால் வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2022ம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தின் தலைநகரமான…

உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கச் சென்ற அமைச்சர் அஜய் மிஷ்ராவை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டதால் வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2022ம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தின் தலைநகரமான லக்னோ, லக்கீம்பூர் உள்ளிட்ட 59 தொகுதிகளில் தற்போது 4ம் கட்டத் தேர்தல் பெரும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமைச்சர் அஜய் மிஷ்ரா லக்கீம்பூரிலுள்ள வாக்குச்சாவடிக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடனும் துணை ராணுவ வீரர்களுடனும் வாக்களிக்க வந்தார். இதனைக் கண்ட பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டதால் சற்று நேரத்தில் அங்கு ஏற்பட்ட நெருக்கடி பின்பு தள்ளு முள்ளாக மாறியது.

மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஷ்ரா, கடந்த ஆண்டு 4 விவசாயிகள் மற்றும் 1 பத்திரிக்கையாளர் உள்பட 5 பேரைத் தனது SUV-யால் இடித்து விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த விபத்தில் சிக்கிய 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் இந்த விபத்துக்கும் ஆஷிஷ் மிஷ்ராவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என அஜய் மிஷ்ரா கூறியதையடுத்து பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. ஆஷிஷ் மிஷ்ராவை கைது செய்ய வேண்டும் என்று லக்கீம்பூர் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து அக்டோபர் மாதம் லக்கீம்பூர் காவல்துறையினர் ஆஷிஷ் மிஷ்ராவை கைது செய்து சிறையிலடைத்தனர்.

 

இதனையடுத்து சிறையிலிருந்த ஆஷிஷ் மிஷ்ரா கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் வாக்களிக்க லக்கீம்பூர் மையத்திற்கு வந்த அமைச்சர் அஜய் மிஷ்ராவிடம் மகனின் ஜாமீனைப் பற்றி விசாரிக்கப் பத்திரிக்கையாளர்கள் அவரைத் தேனீக்கள் போல் சூழ்ந்து கொண்டனர். பத்திரிக்கையாளர்கள் பல கேள்விகள் கேட்டும் எதற்கும் பதிலளிக்காமல் வெற்றிக் குறியீட்டை மட்டும் காண்பித்துவிட்டு வெளியே நகர்ந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.