ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை முடங்காது என்றும் அந்த சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்றும் முன்னாள் அமைச்சரும், இபிஎஸ் ஆதரவாளருமான ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் குறித்து நியூஸ்7 தமிழ் முதன்மைச் செய்தியாளர் விக்னேசுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், இடைத் தேர்தலில் போட்டியிட அதிமுக விரும்புவதை ஏற்றுக்கொண்ட தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு நன்றி தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திமுக ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் கடுமையான அதிருப்தி அலை நிலவுவதாகக் கூறிய ஜெயக்குமார், இடைத் தேர்தலில் அதிமுக அரசின் சாதனைகளையும், திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள வேதனைகளையும் குறிப்பிட்டு வாக்கு சேகரிப்போம் என்றார்.
பொதுக்குழுவால் முறைப்படி அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய ஜெயக்குமார், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவிற்குதான் இரட்டை இலை சின்னம் என்றார். ஓபிஎஸ் அணி ஈரோடு கிழக்கு தொகுதியில் களம் இறங்கினால் சுயேட்சையாகத்தான் கருதப்படுவார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவு அளிக்குமா என்கிற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூறியதை சுட்டிக்காட்டினார். திமுக ஆதரவு அளிக்கும் வேட்பாளரை இடைத்தேர்தலில் தோற்கடிப்பதன் மூலம், இனியாவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் திமுக அரசுக்கு வரும் என்று குறிப்பிட்ட ஜெயக்குமார், எனவே இந்த தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரை வீழ்த்தும் நோக்கத்திற்காக பிற கட்சிகள் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.