அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ’ஜவான்’ படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே வசூலை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் பல வெற்றி படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில், நடிகர் விஜய் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஷாருக்கானின் மனைவி கவுரி கான் தயாரித்துள்ளார். ‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், இன்று மாலை உங்கள் பிளான் என்ன? என ட்விட்டரில் சிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஷாருக்கான், அட்லியுடன் ஜவான் படம் பார்க்கலாம் என யோசிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ‘ஜவான்’எடிட்டிங் வேலை முடிந்துள்ளதை ஷாருக்கான் உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.







