ஜவான் ஒரே வாரத்தில் ரூ.650 கோடி வசூல்!

ஜவான் திரைப்படம் வெளியாகி 7 நாட்களில் ரூ.650 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும், ரூ.300 கோடி வசூலை வேகமாக கடந்த திரைப்படம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில்…

ஜவான் திரைப்படம் வெளியாகி 7 நாட்களில் ரூ.650 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும், ரூ.300 கோடி வசூலை வேகமாக கடந்த திரைப்படம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியானது.

இதுவரை இல்லாத அளவில் படத்துக்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதாகவும், படமும் சிறப்பாக இருப்பதாகவும் பாலிவுட் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் உலகம் முழுவதும் ரூ.129 கோடி வசூலித்துள்ளதாகவும், இரண்டு நாட்களில் ரூ.240.47 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

உலகம் முழுவதும் 5நாள்களில் ரூ. 574.89 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், ஷாருக்கான் ஒரு வருடத்தில் தொடர்ந்து இரண்டு ₹500 கோடி வசூல் செய்த ஒரே நடிகர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றுள்ளார். ஏனெனில் ஷாருக்கான் கடைசியாக நடித்த பதான் திரைப்படமும் வசூலில் சாதனை புரிந்திருந்தது.ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் 6 நாட்களில் ரூ.621.12 கோடியை வசூலித்தாக படக்குழு நேற்று அறிவித்தது. பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு லாபம் பார்த்துள்ள இப்படம் வார நாட்களிலும் வசூலில் குறையவில்லை. இந்நிலையில் படம் வெளியாகி முழுவதுமாக ஒரு வாரம் ஆகி, அடுத்த வாரத்தில் காலடி பதித்துள்ளது. அதன்படி, தற்போது ரூ.650 கோடியை தாண்டி வசூலானதாக கூறப்படுகிறது.

இந்த படம் ஒரு வாரத்தில் 9.7 லட்சம் (970956) டிக்கெட்டுகளை விற்றுத்தீர்த்ததாக கூறப்படுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் ஹிந்தியில் 11608 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.17.62 கோடியும், தமிழில் 1052 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1.47 கோடியும், தெலுங்கில் 852 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1.03 கோடி வசூலும், மேலும் மல்டி ஃப்லெக்ஸ் திரையரங்குகள் வசூல் என மொத்தம் ரூ.23.03 கோடி வசூலித்துள்ளது.

ஜவான் திரைப்படம் 6 நாட்களில் பெற்ற வசூலை ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் 7 நாட்களிலும், கதர் இரண்டாம் பாகம் 8 நாட்களிலும், பாகுபலி 2 ஹிந்தியில் 10 நாட்களிலும், கேஜிஎஃப் 2 ஹிந்தி பதிப்பு 11 நாட்களிலும், டங்கல் 13 நாட்களிலும், டைகர் ஜிந்தா ஹை திரைப்படம் 16 நாட்களிலும், பிகே 17 நாட்களிலும், வார் 19 நாட்களிலும் பெற்றுள்ளது. இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்திய திரைப்படங்களில் மிக வேகமாக ரூ.300 கோடி வசூலை பெற்ற படம் என்ற புகழையும் பெற்றுள்ளது. ‘ஜவான்’ படத்தின் வசூலை பாதிக்கும் என கருதப்பட்ட பிரபாஸின் ‘சலார்’ படமும் ஒத்திவைக்கப்பட்டதால் ‘ஜவான்’ ரூ.1000 கோடியைத் தாண்டி பாலிவுட்டில் புதிய சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.