ஜவான் படத்தின் அடுத்த பாடலான ஹய்யோடா பாடல் ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பதான் வெற்றிப் படத்திற்கு பிறகு நடிகர் ஷாருக்கான் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடித்துள்ள படம் ஜவான். இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ‘ஜவான்’ படத்தின் ‘வந்த இடம்’ பாடல் சில தினங்களுக்கு முன் இணையத்தில் வெளியாகி அதிக படியான லைக்குகளையும், பார்வைகளையும் பெற்று SRK ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக இந்த பாடலில் ஷாருக்கானின் நடன அசைவுகள் மக்களை கிறங்க வைத்துள்ளதோடு, அனிருத்தின் குரலும், இசையும் பலரையும் கவர்ந்து தங்கள் சமூகவலைத்தள பக்கத்தில் SRK போலவே நடனமாட வைத்து தற்போது பகிர்ந்தும் வருகின்றனர்.
இந்நிலையில், இப்பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. அதில், இப்பாடலுக்காக எப்படி சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டது போன்ற காட்சிகளும், ஷோபி மாஸ்டர் எப்படி ஷாருக்கானுக்கும், நடன கலைஞர்களுக்கும் நடன அசைவுகளை கற்று தருகின்றார் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதோடு, படப்பிடிப்பின் போதும் ஷாருக்கான் அனைவரிடமும் இயல்பாக நட்பு பாராட்டி பழகிய நிகழ்வுகளும் அதில் இணைத்து பகிரப்பட்டுள்ளது.
குறிப்பாக அந்த வீடியோவில் ஷாருக்கானுக்கு அட்லீ தமிழ் கற்றுத் தருவதும், பின்னர் தமிழ் அர்த்தத்தை கேட்டு தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நடனத்தில் ஷாருக்கான் அசத்துவதுமான காட்சி ரசிகர்களிடத்தில் மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருகிறது. நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் 7 செப்டம்பர் 2023 அன்று ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.
இந்த நிலையில் ஜவான் படத்தின் அடுத்த பாடலான ஹய்யோடா பாடல் ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடலை இந்தியில் பிரபல பாடகர் அர்ஜித் சிங் பாடியுள்ளார், தமிழில் இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். தற்போது இப்பாடலின் முன்னோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.







